ஜாஷ்பூர்: முதுகு தண்டுவடத்தில் காயமடைந்த சட்டீஸ்கர் கபடி வீரர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், மாநிலத்தில் ஒரு மாத இடைவெளியில் 3 வீரர்கள் காயமடைந்து இறந்ததாக கூறப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கபடி போட்டியின் போது முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயம் அடைந்த சமரு கெர்கெட்டா (28) என்ற கபடி வீரர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட கடந்த ஒருமாதமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஜாஷ்பூர் கலெக்டர் ரவி மிட்டல் கூறுகையில், ‘கபடி வீரர் சமரு ெகர்கெட்டாவிற்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால், தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவுடன் தொடர் சிகிச்சையில் இருந்தார்.
மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இறந்த சமரு கெர்கெட்டாவின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்யும்’ என்றார். முன்னதாக பெண் கபடி வீராங்கனை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ராய்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த அக். 15ம் தேதி இறந்தார். அதேபோல் ராய்கர் மாவட்டத்தில் நடந்த கபடி போட்டியின் போது பலத்த காயமடைந்த 32 வயது வீரர் ஒருவர் அக்டோபர் 11ம் தேதி இறந்தார். சட்டீஸ்கர்ஹியா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை ஒரே மாதத்தில் 3 வீரர்கள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.