வாரணாசியில் ஒருமாதம் நடக்க உள்ள காசி தமிழ் சங்கமம் இன்று தொடக்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

வாரணாசி: வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான பழமையான கலாசார தொடர்பை மீண்டும் புதுப்பிக்கவும், கொண்டாடவும் ‘காசி தமிழ் சங்கமம்’ விழா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கலாசாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களும் உத்தரப்பிரதேச அரசும் செய்துள்ளன. அடுத்த மாதம் 16ம் தேதி வரை ஒரு மாதம் நடக்க உள்ள இவ்விழாவை பிரதமர் மோடி வாரணாசியில் இன்று தொடங்கி வைத்து, தமிழக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இவ்விழாவிற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய, கலாசார ஆய்வாளர்கள், கைவினைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் என 12 பிரிவுகளின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர் வாரணாசிக்கு 8 நாள் சுற்றுப்பயணமாக செல்கின்றனர்.  200 மாணவர்களைக் கொண்ட இதன் முதல் குழு, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக புறப்பட்டு வாரணாசி சென்றது. விழாவில், காசி மற்றும் தமிழகம் இடையேயான கலாசார உறவை பிரதிபலிக்கும் விதமான கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஆவணப்படங்கள், புத்தகங்கள், உணவு வகைகள், சுற்றுலாதலங்கள் ஆகியவற்றின் கண்காட்சி நடத்தப்படும். தொடக்க விழாவில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்க ச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் பிரதிநிதிகளை வரவேற்க வாரணாசி உள்ளாட்சி நிர்வாகம் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது. தமிழக மக்களுடன் தொடர்பு கொள்ள சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொள்ளுமாறு உள்ளூர் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.