சென்னை: வினாத்தாள் மாறிய விவகாரத்தில் சென்னைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இன்று (நவ.18) பிற்பகல் நடைபெறவிருந்த மேலும் ஒரு தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அதன் உறுப்புக் கல்லூரிகளாக உள்ள அரசு கலை அறிவியில் கல்லூரிகளிலும், சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான தமிழ் அரியர் பாடத்தேர்வு நடைபெறவிருந்தது.
தேர்வு அறையில் இருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியிருந்தது. அதாவது 3-வது செமஸ்டர் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு 4-வது செமஸ்டருக்கான தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த கேள்வித்தாள் கடந்தாண்டு 4-வது செமஸ்டரின் தமிழ் கேள்வித்தாள் என்பதும், 2021 என்பதற்கு பதிலாக 2022 என்று மட்டும் அதில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. தேர்வெழுத முடியாமல் மாணவர்கள் தேர்வு அறையில் அமர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் உடனடியாக சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கவுரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இன்று காலை நடைபெறவிருந்த தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வேறு ஒருநாள் நடத்தப்படும். அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறவிருந்த 4-வது செமஸ்டருக்கான தமிழ் அரியர் தேர்வையும் ரத்து செய்து சென்னைப் பல்கலைக்கழகம் நிர்வாகம் அறவிப்பு வெளியிட்டுள்ளது.