53 வயது நபரின் சிறுநீரகத்தில் கால்பந்து சைஸ் கட்டி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

ஹைதராபாத்திலுள்ள ஆசிய நெப்ராலஜி மற்றும் யூரோலஜி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் 53 வயது நபரின் சிறுநீரகத்திலிருந்து கால்பந்து சைஸ் கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
வியாழக்கிழமை நடந்த இந்த அறுவைசிகிச்சையை டாக்டர் மல்லிகர்ஜூனா சி, டாக்டர். டைஃப் பெண்டிகேரி மற்றும் டாக்டர் ராஜேஷ் கே. ரெட்டி ஆகிய சிறுநீரக நிபுணர்கள் அடங்கிய குழு வெற்றிகரமாக முடித்திருக்கிறது.
கடப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வயிற்றில் வீக்கம் ஏற்படவே மருத்துவ பரிசோதனைக்காக AINU மருத்துவமனையை அணுகியிருக்கிறார். பரிசோதனை செய்து பார்த்ததில் இடது சிறுநீரகத்தில் 10 கிலோ எடையுள்ள பெரிய சைஸ் கட்டி இருந்தது தெரியவந்தது. அந்த கட்டியானது வயிற்றில் மூன்றில் இரண்டு பகுதியை அடைத்திருப்பதும், மேலும் குடலை வயிற்றின் வலது கீழ்ப்புறத்தில் தள்ளியும் இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் முறையாக ஆலோசனை வழங்கி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.
image
இதுகுறித்து மருத்துவர் மல்லிகர்ஜூனா கூறுகையில், ‘’கட்டியின் அளவை கருத்தில்கொண்டு ரோபோட்டிக் சிகிச்சை முறையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். ஓபன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் சிறுநீரகத்தை ஒட்டி வளர்ந்திருந்த பெரிய சைஸ் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பிறகே வயிற்றிலிருந்த கட்டியானது கால்பந்து அளவிற்கு பெரிதாக இருந்தது தெரியவந்தது. மைக்ரோஸ்கோபிக் பரிசோதனை செய்துபார்த்ததில் அந்த கட்டியானது கேன்சர் செல்களை (Renal Cell Carcinoma) கொண்டிருந்தது தெரியவந்தது’’ என்கிறார்.
image
டாக்டர் டைஃப் பெண்டிகேரி கூறுகையில், ‘’வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருந்தது. நோயாளி கட்டியை பெரிதாக நினைக்காவிட்டாலும், அதனை கண்டுகொள்ளாமலும் விட்டுவிடவில்லை என்பது எங்களுக்கு ஆச்சர்யமளித்தது. கேன்சர் செல்களால் பாதிக்கப்பட்ட இடது சிறுநீரகத்தையும் எங்கள் குழு அகற்றிவிட்டது. மைக்ரோஸ்கோபிக் முறை மூலம் பரிசோதனை செய்துபார்த்ததில் கேன்சர் செல்கள் முழுவதுமாக அகற்றப்பட்டது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக, கேன்சர் செல்கள் மற்ற உறுப்புகளுக்கு பரவாததால் நோயாளிக்கு கூடுதல் தெரபி எதுவும் தேவைப்படவில்லை. நாங்கள் முன்கூட்டியே நோயாளியை இதுகுறித்து எச்சரித்திருந்தோம். அவரும் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டார்’’ என்றார்.
image
AINU-இன் தலைமை இயக்குநர் டாக்டர் பர்ணசந்திரா ரெட்டி கூறுகையில், ‘’சிறுநீரக கேன்சரானது உலகளவில் அதிகரித்து வருகிறது. எனவே இதனை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது. இந்த நோயாளியைப்போல ஆரம்பகட்டத்திலேயே கண்டறியப்பட்டால் ஆரோக்கியமான முறையில் கட்டியை நீக்கிவிடலாம்’’ என்கிறார். இதுபோன்ற கட்டியை வெற்றிகரமாக அகற்றியது இந்தியாவிலேயே இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.