ஈரோடு : சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை ஒரே நாளில் 700 ரூபாய் விலை உயர்ந்து கிலோ ரூ.1575-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கொத்தமங்கலம், தாண்டாப்பாளையம், பவானிசாகர் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், கேரளா, கர்நாடகா மாநிலம் முக்கிய நகரங்களுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
பனிக்காலம் துவங்கி விட்டதால் பூக்களின் வரத்து குறைவாலும், முகூர்த்தம் மற்றும் சுபகாரியங்கள் காரணமாகவும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மல்லிகை பூ விலை ஒரே நாளில் ரூ.700 அதிகரித்து கிலோ ரூ.1575-க்கு விற்பனையாகிறது. இது தவிர முல்லை ரூ.480 முதல் ரூ.700-ஆக உயர்ந்துள்ளது. காக்கடா ரூ.300 முதல் ரூ.430-ஆகவும், ஜாதிமுல்லை ரூ.600 முதல் ரூ.750 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.