ஜனங்களின் கலைஞனுக்குப் பிறந்தநாள்: "காமெடியில் ஏது டார்க்கு, வொயிட்டு?"- விவேக் பர்சனல் பக்கங்கள்!

சின்னக் கலைவாணர் விவேக்கின் பிறந்த தினம் இன்று. தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் மூட நம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். விவேக்கைப் பற்றிய சில சுவாரஸ்யங்கள் இங்கே!

* இளையராஜாவின் ரசிகர். சினிமா தவிர இசையிலும் ஆர்வம் உள்ளவர். பியானோ வாசிக்கப் பிடிக்கும். அதை இளையராஜாவிடமே வாசித்துக் காட்டி, பாராட்டுகளையும் வாங்கியவர். பியானோவை அப்துல் சத்தார் மாஸ்டரிடம்தான் கற்றிருக்கிறார்.

‘சக்க போடு
போடு ராஜா’

* முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு விவேக்கின் காமெடி ரொம்பவே பிடிக்கும். அந்த அன்பில் அவர் விவேக்கை அழைத்து ‘நகைச்சுவையுடன் நீங்கள் மரம் நடுதலும் செய்து நாட்டை பசுமையாக்குங்கள்’ எனக் கடந்த 2008ம் ஆண்டில் சொன்னார். அவரது வேண்டுகோளைச் சிரத்தையுடன் கடைப்பிடித்து வந்தார். ஒரு கோடி மரங்கள் நட்டுவிட வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடியவர்.

* சந்தானத்துடன் ‘சக்கபோடு போடுராஜா’ வில் இணைந்து நடித்திருக்கிறார் விவேக். அந்தப் படத்துக்காக விவேக்கைச் சந்தித்த சந்தானம், “அண்ணே ஸ்கூல் காலத்துல இருந்து உங்களோட காமெடி பாத்து வந்தவங்க நாங்க. நான் உங்களை ரசிச்சு வந்தவன். அதனால உங்களைத் தப்பா பயன்படுத்த மாட்டேன். நீங்க என்னவேணா என்னைக் கலாய்ங்க… திருப்பி உங்களைக் கலாய்க்க மாட்டேன்” என்று சொல்லி நடிக்கக் கூப்பிட்டார். சந்தானத்துடன் நடிக்கச் சம்மதித்த விவேக் அவரிடம், “கலாய்க்கறதுதானே உங்க ஸ்டைலு… நீங்களும் பதிலுக்கு கலாய்ச்சாதான் காமெடி சிறப்பாக வரும்” எனச் சொல்லி அவரை என்கரேஜ் செய்திருக்கிறார். இதை சந்தானம் பல இடங்களில் மறக்காமல் குறிப்பிடுவார்.

விவேக்கின் பியானோ டைம்

* உடல்நலனிலும் அக்கறை உள்ளவர். அதிகாலையில் பல கிலோமீட்டர் சைக்கிளிங் மேற்கொள்வார். ‘தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்பதைக் கடைப்பிடித்து வந்தார். அவரது அலுவலகத்தில் உள்ள அவரது பர்சனல் அறையில் அதைப் பெரிய எழுத்துகளில் பிரின்ட்அவுட் எடுத்தும் ஒட்டியிருந்தார்.

* அதே சமயம் சென்னை நகருக்குள் சைக்கிளிங் செய்வது அவருக்குப் பிடிக்காமல் போனது. “இந்த சிட்டில சைக்கிள் ஓட்டினா உடம்பு இளைக்கும். ஆனா, கண்டிப்பா ஆஸ்துமா வந்துடும்! லாரி, பஸ் விடுற புகை, குப்பை லாரி அள்ளித் தெளிக்கற குப்பைகளுக்கு மத்தியில சைக்கிள் ஓட்டணும்” எனச் சொல்லி, நகரில் சைக்கிள் ஓட்டுவதைக் குறைத்துவிட்டார்.

* தன் அலுவலகத்தில் மினி லைப்ரரி வைத்திருந்தார். அதில் ஆங்கில நாவல்களும் இடம்பெற்றிருந்தன. அவரது காரிலும் சில புத்தகங்கள் பயணிக்கும். சிட்னி ஷெல்டனின் சிஷ்யை டில்லி பேக்‌ஷாவ்வின் எழுதிய ‘மிஸ்ட்ரஸ் ஆஃப் த கேம்’, அரவிந்த் அடிகாவின் ‘வொயிட் டைகர்’ இரண்டும் அவர் அடிக்கடி படித்த புத்தகங்கள்.

* சமூக அக்கறையுள்ள கருத்துகளைப் பல வருடங்களாகப் படங்களில் தொடர்ந்து சொன்னதற்காகவும், பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்ததற்காகவும் வேல்ஸ் பல்கலைக்கழகம் விவேக்கிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

மரம் நடுதல்

* அவ்வப்போது தோன்றும் கவிதைகளை டைரி ஒன்றில் குறித்து வந்தார். அதைப் புத்தகமாகக் கொண்டு வரும் ஐடியாவிலும் இருந்தார்.

* வெளிநாடு செல்வதென்றால் அவருக்கு இஷ்டம். பிடித்த நாடு மலேசியா. உலக காமெடியன்களின் சிறந்த காமெடிகளின் டி.வி.டி-க்களை எல்லாம் வெளிநாடுகளில் வாங்கித்தான் அவர் சேகரித்து வைத்திருந்தார்.

* காமெடியைப் பொறுத்தவரை ‘மக்கள் ரசிக்கிற எல்லாமே சிறந்த கலைவடிவம்தான்.’ என்பார். காமெடியில டார்க் காமெடி என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார். “நகைச்சுவையில் ஏது டார்க்கு, வொயிட்டு?! ஹியூமரே வாழ்க்கையோட லைட்டர் சைட்தானே! வாழ்க்கைல சிரிக்கிறதுக்காக வச்ச ஒரு விஷயம்தான் காமெடி. அதுமேல பெயின்ட்டை ஊத்தி டார்க் காமெடினு சொல்ல முடியுமா?” என்பார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.