மதுரை: அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் வழக்கம்தான். எனவே பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் பழனிசாமியை சந்திக்க வேண்டும். அப்போதுதான் விடிவுகாலம் கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் கோச்சடை அருகேயுள்ள கொடிமங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில்கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தமிழக அரசின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை. அதை வெளிப்படுத்தும் விதமாகவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என பேசி வருகிறார். அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. அதில் ஏறுபவர்கள் டெல்லிக்கு செல்லலாம். கூட்டணிக்கு எப்போதும் அதிமுகதான் தலைமை ஏற்கும்.
அதிமுக கூட்டணியை நம்பி வருபவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம். தமிழ்நாடு திராவிட பூமி; இங்கு திராவிட இயக்கம் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இப்போது ஒன்றாகத்தான் உள்ளோம். அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு பிரிந்தவர்கள் மீண்டும் இணைவதும் வழக்கம்தான். எனவே பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் பழனிசாமியை சந்திக்க வேண்டும். அப்போதுதான் விடிவுகாலம்கிடைக்கும். எதிர்காலத்தில் எதுவும் எப்படியும் மாறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.