பள்ளி மாணவர்களுக்கு கழிவறை செல்பி போட்டி: கடும் எதிர்ப்பால் வாபஸ்

நாசிக்: மாணவர்கள் கழிவறையுடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிராக ஆசியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்று உலக கழிவறை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் ஜில்லா பரிசத் கல்வி துறை சார்பாக  பள்ளிகளுக்கு கடந்த 14ம் தேதி சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதில், உலக கழிவறை தினத்தையொட்டி 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றது. மாணவர்கள் சுத்தமான கழிவறையுடன் செல்பி எடுக்க வேண்டும் மற்றும் ‘கனவு கழிவறை’ என்ற தலைப்பில் படம் வரையவேண்டும், சுத்தம், சுகாதாரம் குறித்து நாடகங்கள் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் போதுமான அளவு கழிவறைகள் இல்லை. கழிவறைகள் இருந்தாலும் சுத்தமாக இல்லை. 120 மாணவர்களுக்கு ஒரு கழிவறை தேவை. ஆனால் இந்த எண்ணிக்கையை யாரும் பின்பற்றுவது இல்லை. எனவே இதுபோன்ற போட்டி நடத்தக்கூடாது என்று பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த கழிவறையில் செல்பி, கனவு கழிவறை ஓவிய போட்டி மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் புதிய சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.