சிதம்பரம்: சிதம்பரத்தை சேர்ந்தவர் நடராஜன் என்கிற தர்ஷன் தீட்சிதர். இவர் நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் 21 படிக்கட்டு எதிரில், வெளிப்பிரகாரத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ‘கோயிலில் நடைபெறும் பூஜையில், பணி செய்ய விடாமல் என்னை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பொது தீட்சிதர்கள், தவறே செய்யாத என்னை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளார்கள். எனக்கு கொடுக்க வேண்டிய வேலையை ஏலம் விட்டு மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டார்கள். இதை பற்றி கோயில் தீட்சிதர்களிடம் கேட்டால் நீங்கள் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வரவேண்டும் என்கின்றனர்’ என தெரிவித்துள்ளார். காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த தர்ணா போராட்டம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. அதன்பின் சிதம்பரம் டிஎஸ்பி ரகுபதியிடம் புகார் மனு கொடுத்தார். தீட்சிதரின் திடீர் தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
