சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின்பகிர்மான இயக்குநர் சிவலிங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரும் நாட்களில் அதிகமழை பெய்தாலும்கூட எவ்வித பாதிப்பும்இன்றி சீரான மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எங்கும் மின்விநியோகத்தில் பாதிப்பு இல்லை. கனமழை பெய்த சீர்காழியில் 36 மணி நேரத்துக்குள் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது.
மின்இணைப்புடன் ஆதார் எண்இணைப்பது குறித்து மின் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. மின்இணைப்பு வைத்துள்ள நுகர்வோர்கள் உயிரிழந்திருக்கும் பட்சத்தில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மின்இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒருவர் பெயரில் 3 அல்லது 5 மின்இணைப்புகள் உள்ளன. அவ்வாறு வைத்துள்ளவர்கள் தங்கள்ஆதார் எண்ணை, மின்இணைப்புடன் இணைத்தால் அவருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் என்பது தவறான தகவல். எத்தனை மின்இணைப்புகள் உள்ளன, யார் யார் பெயரில் உள்ளது, எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட தரவுகளை பெறுவதற்காகத்தான் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
திமுக அரசு பதவி ஏற்றபோது 1.15 கோடி மின்நுகர்வோர் குறித்ததரவுகள்தான் இருந்தது. இப்போதுதான் 3 கோடி தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எவ்வளவு மின்னுற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது, எவ்வளவு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது, எவ்வளவு மின்இழப்பு போன்ற தகவல்கள் தெரியவந்துள்ளன.
கடந்த ஆண்டு ஒரு சதவீதத்துக்கும் சற்று குறைவாக மின்இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மின்வாரியத்துக்கு ரூ.560 கோடி மிச்சமாகியுள்ளது. இதுபோன்று எந்த இடங்களில் செலவு அதிகமாக உள்ளது, எங்கு விரயம் ஏற்படுகிறது ஆகியவற்றை எல்லாம் கணக்கிடவே ஆதார் எண்இணைக்கப்படுகிறது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
திருவாரூர், சேலம், கரூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் ஜனவரி மாதம் சூரிய சக்தி மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 400 மெகாவாட் சூரியசக்தி மின்சார உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக 3,263 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளது.
காற்றாலை மின்சாரம் தயாரிப்பதில் முதல் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. சூரியசக்திமூலம் மின்சாரம் தயாரிப்பதில் 4-வது இடத்தில் உள்ளது. விரைவில் 1,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் வகையிலான இத்திட்டம் தொடங்கப்பட்டால், தமிழகம் முதல் மாநிலமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். எந்த இடங்களில் செலவு அதிகம் உள்ளது, எங்கு விரயம் ஏற்படுகிறது என்று கணக்கிடவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.