பியாங்யாங்,-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதல் முறையாக தன் மகளை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். ஏவுகணை ஏவும் தளத்திலிருந்து, தன் மகளின் கையைப் பிடித்தபடி அவர் வரும் புகைப்படத்தை, கொரிய செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது.
கிழக்காசிய நாடான வட கொரியா, ஒரு மர்மப் பிரதேசமாகவும், இரும்புத் திரை போர்த்திய நாடாகவும் உள்ளது. இங்கு நடக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் ரகசியமாகவே வைக்கப்படும்.
பொருளாதார தடை
இங்கு, அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதால், அமெரிக்காவின் பொருளாதார தடையை வட கொரியா எதிர்கொண்டு வருகிறது.
அதிபர் கிம் ஜோங் உன்னின் தனிப்பட்ட விஷயங்களும், அவரது குடும்பத்தினர் பற்றிய விஷயங்களும் பரம ரகசியமாக உள்ளன.
அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதில் இருவர் பெண் குழந்தைகள் என்றும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது.
இதைத் தொடர்ந்து, அந்த ஏவுகணை ஏவும் தளத்தில் இருந்து, கிம் ஜோங் உன், ஒரு சிறுமியின் கையைப் பிடித்தபடி வரும் புகைப்படங்களை, வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ., நேற்று வெளியிட்டது.
அந்த சிறுமியின் பெயர், அவர் யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் அந்த சிறுமி, கிம் ஜோங் உன்னின் மூத்த மகள் என்றும், அவரது பெயர் ஜூ அய் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, வட கொரிய அரசியல் விவகாரங்களுக்கான நிபுணர் மைக்கேல் மேடன் கூறியதாவது:
இந்த சிறுமி, கிம் ஜோங் உன்னின் மகளாகத் தான் இருக்க வேண்டும்.
தன் குடும்பம் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை ரகசியமாக வைக்கும் கிம், தன் மகளை முதல் முறையாக வெளி உலகிற்கு அறிமுகப் படுத்துகிறார் என்றால், அதற்கு பின்னணியாக ஏதோ ஒரு முக்கிய காரணம் இருக்கும்.
![]() |
தலைமைப் பொறுப்பு
தனக்குப் பின், வட கொரியாவின் தலைமைப் பொறுப்புக்கு தன் மகள் வர வேண்டும் என அவர் விரும்புவதாக தெரிகிறது.
இந்த சிறுமிக்கு, ௧௨ – ௧௩ வயது இருக்கலாம். படிப்பை முடித்த பின், சில காலம் ராணுவ பயிற்சி அளித்து, நாட்டின் தலைமைப் பொறுப்பை தன் மகளிடம் கொடுக்க, கிம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பொது நிகழ்ச்சியில், அதுவும் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சியில் தன் மகளை அவர் அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, உலக நாடுகளுக்கு கிம் ஏதோ ஒரு முக்கிய செய்தியை சொல்ல வருவதாகவே தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்