புதுடெல்லி: வாரணாசியில் மகாகவி பாரதியார் வசித்த வீட்டுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று நேரில் சென்று, பாரதியாரின் மருமகனை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் நடைபெறுகிறது.
இதையொட்டி வாரணாசி சென்றுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு கங்கை நதியின் அனுமன் படித்துறையையொட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்தை நேற்று பார்வையிட்டார். அங்கு பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி. கிருஷ்ணனை சந்தித்து, பாரதியாரின் நினைவுகள் குறித்து கலந்துரையாடினார். தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாச்சாரத் துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த சங்கம நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.