விமல், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா திரைப்பட இயக்குனர் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் பேரரசு,லிங்குசாமி,எழில் மற்றும் நடிகர் ரமேஷ்கண்ணா ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பேரரசு பேசியபோது, ” துணிவு, வாரிசு திரைப்படங்கள் பொங்கலுக்கு வருகிறது. ஆனால், தெலுங்கில் பொங்கலுக்கு வெளியிட மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்று பிரிவினைகள் இல்லை. கேஜிஎப்,பாகுபலி போன்ற படங்கள் தமிழ்நாட்டில் பண்டிகை தினத்தில் தான் ஓடி வெற்றிபெற்றது.
பொன்னியின் செல்வனை கொண்டாடிய நாம்,காந்தாரா வெற்றியையும் கொண்டாட தவறவில்லை. தமிழர்கள் மட்டுமே ஆந்திரா, மலையாளி போன்றோரை திராவிடம் என்ற உணர்வோடு பார்க்கிறோம். ஆனால், அவர்கள் தமிழர்கள் என்றே பிரித்து பார்க்கிறார்கள். ஆகவே, தென்னிந்திய வினியோஸ்கதர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு இதை தட்டி கேட்க வேண்டும். வாரிசு போன்ற தமிழ் திரைப்படத்திற்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். வாரிசு திரைப்படம் ஆந்திராவில் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றால்,தமிழ்நாட்டில் தெலுங்கு சினிமா வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என்று ஆகிவிடும்” என ஆவேசமாக கூறினார்.
இயக்குனர் லிங்குசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது,” இந்த காலம் சினிமாவின் பொற்காலம். பல காலகட்டங்களாக பேன் இந்தியா என்ற பெயரில் தமிழ் தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளி வந்துள்ளது. இங்கு திரையிடப்படும் படத்தை எங்கோ ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து ரசிகர்கள் ஓ.டி.டி-யில் பார்க்கின்றனர். முக்கியமான காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனை வரவே கூடாது. தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று சொன்னால் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அந்த அளவிற்கு அது பிரச்சனையாகும். வாரிசுக்கு முன்னும் பின்னும் என்று பெரிய விஷயமாக மாறிவிடும். மிகத் தரமான ஆட்கள் இரண்டு இடங்களிலும் உள்ளனர் அவர்கள் பேசி இதற்கு சுகமான முடிவை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அதே கருத்தை செய்தியாளர்களிடமும் இயக்குநர் பேரரசு ஆவேசமாக கூறினார். அவர் பேசும்போது, ” வாரிசு ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்கள் இங்கு ரிலீசாகாத அளவிற்கு பிரச்சனைகள் பெரிதாக வர வாய்ப்புள்ளது” என எச்சரித்தார்.