விகேபுரம்: விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் காலனி 3வது தெருவில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் குட்டை போன்று தேங்கியுள்ளது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஏற்கனவே இப்பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இந்நிலையில் தற்போது மழைநீருடன் கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபகுதியில் கடந்தாண்டு பெய்த கனமழையால் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்த நிலையில், தற்போது மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.