வங்கி பணியாளர்கள் சங்கங்களில் செயலாற்றுவதை தொடர்ந்து, அவர்கள் மீது வங்கி நிர்வாகங்கள் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி, அதனை கண்டித்து இன்று ஒருநாள் போராட்டம் நடத்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) முன்னரே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினஅ பொதுச்செயலாளர் சிஹெச் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, வங்கிகளுக்கும் சங்கங்களுக்குமான பிரச்சனை சுமுகமாக பேசித்தீர்க்கப்பட்டுள்ளது என்றும். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வங்கிகள் ஒத்துழைப்பு தருவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால், அவர்கள் இன்று ஒருநாள் திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக,”சமீப காலமாக பணியாளர்கள் மீதான வஞ்சகம் அதிகரித்து வருவது மட்டுமின்றி, இவை அனைத்திலும் பொதுவான தொடர்பு ஒன்று உள்ளது.
பணியாளர்கள் மீதான இந்த பாரபட்சத்தை திட்டமிட்டு செய்கின்றனர். சில வழிமுறைகள் வேடிக்கையாக உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக இந்த வகை தாக்குதல்களை எதிர்த்து, பதிலடி கொடுத்து மற்றும் வஞ்சத்தை முறியடிக்க வேண்டும்” என்று வெங்கடாச்சலம் கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, IBEA தொழிற்சங்கத் தலைவர்கள், சோனாலி வங்கி, MUFG வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் / சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி செயல்பாட்டிற்கு, பணியாளர்கள் அல்லாமல் வெளியாட்கள் மூலம் செய்வதாகவும் வெங்கடாசலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், 3,300க்கும் மேற்பட்ட எழுத்தர் ஊழியர்கள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.