வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை பனையூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு நடிகர் விஜய் அழைத்து பிரியாணி விருந்து வைத்துள்ளார். வாரிசு திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை எப்படி தீர்க்கலாம் என்று ஆலோசனையை நடத்த இந்த அவசரக் கூட்டத்தை விஜய் கூட்டி இருக்கலாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு சிக்கல் எழுந்த பொழுது இது போன்ற விருந்தை ரசிகர்களுக்கு விஜய் வைத்ததில்லை.
இதனால் அரசியல் அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக பேசப்பட்டது. ட்விட்டரிலும் #பனையூர்_பிரியாணி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியான தொல்லைகள் எழுந்து வரும் நிலையில் அதிகாரப்பூர்வமாக அரசியலில் இறங்க திட்டமிட்டு தான் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கலாம் என சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.
அதே நேரத்தில் வாரிசு திரைப்பட பிரச்சனைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இது நிலையில் பிரியாணி விருந்து முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்திடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “இந்த கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளிப்பார்” என தெரிவித்தார். மேலும் அடுத்து சில நாட்களுக்குள் மற்ற மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நடக்கும் என தெரிவித்துள்ளார். விஜய் தொடர்ந்து தனது ரசிகர்களை சந்திப்பது அவர் அரசியலுக்கு வருவதற்கு தான் என்று அவருடைய ரசிகர்கள் அழுத்தமாக சொல்கின்றனர்.