குவாஹாட்டி: அருணாச்சல பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் புதிய அணுகுமுறைக்கு இது உதாரணம் என பெருமிதமாக தெரிவித்தார்.
சீனாவின் எல்லையில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹலோங்கியில் பசுமை விமான நிலையம் அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி முடிந்ததையடுத்து, இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இது இம்மாநிலத்தின் முதல் பசுமை விமான நிலையம் ஆகும். இதற்கு டோனி போலோ விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.
டோனி போலோ விமான நிலையத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 70 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 9 விமான நிலையங்கள் மட்டுமே நிறுவப்பட்டன. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற 8 ஆண்டுகளில் 7 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்களின் இணைப்புக்கு அளிக்கப்படும் சிறப்பு முக்கியத்துவத்தை உணர முடியும்.
அந்த வகையில் பசுமை விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களின் புதிய சகாப்தமாக இது விளங்குகிறது. இந்தியாவின் புதியஅணுகுமுறைக்கு சரியான உதாரணமாக இன்றைய நிகழ்ச்சி (விமானநிலைய திறப்பு) அமைந்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான பிறகுஇந்த மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதிக்கென தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அவரது ஆட்சி முடிந்த பிறகு வளர்ச்சிப் பணிகள் முடங்கின. பின்னர் 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் 600 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்தையும் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் இம்மாநிலம் மின் மிகை மாநிலமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு கமெங் மாவட்டத்தில் 600 மெகாவாட் நீர் மின் உற்பத்தி திட்டத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.