ஆயிரம் அரிதாரங்கள் பூசினாலும் வீழ்த்த முடியாது: முதல்வர் ஸ்டாலின்!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் உருவாகி, நீதிக்கட்சி என அழைக்கப்பட்ட பேரியக்கம் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தோன்றியது. அந்த வகையில், நீதிக்கட்சியின் 107 ஆவது ஆண்டு இன்று தொடங்குகிறது.

அனைவருக்கும் சம உரிமை, சம நீதி எனும் சமத்துவக் கோட்பாட்டு நிலைப் பெற தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சியில், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காகச் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். சுயமரியாதை இயக்கங்கள், நீதிக்கட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக திராவிட இயக்கங்கள், கட்சிகள் தோன்றின.

இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து ஓங்கி வளர்ந்து இருப்பதற்கு அடித்தளம் அமைத்தது நீதிகட்சி அரசுதான் என்றால் அது மிகையாகாது. இந்த நிலையில், நீதிக்கட்சியின் 107 ஆவது ஆண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமூக நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்! சாதியின் பெயரால் கல்வி – வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்!

தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து – அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்! ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது! திராவிடா.. விழி! எழு! நட!.” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.