தோகா: உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று (நவ.,20,) கத்தாரில் துவங்க உள்ளது.
உலகின் 32 நாடுகள் பங்கு கொள்ளும் இந்த விளையாட்டு போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
இந்த விளையாட்டு தொடர் கடந்த 1930 ஆண்டு முதல் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946ம் ஆண்டுகளில் இது நடைபெறவில்லை. கடைசியாக 2018 ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த கால்பந்தாட்ட தொடரில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
32 நாடுகள் பங்கேற்பு
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 22 வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று கோலகலமாக துவங்குகிறது. கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ள இந்த விளையாட்டு தொடர் வரும் டிசம்பர் 18 வரை 29 நாட்கள் நடைபெற உள்ளது. கத்தாரில் உள்ள 5 முக்கிய நகரங்களில் நடக்க உள்ள இந்த விளையாட்டு தொடரில் பிரேசில், ஜெர்மனி மற்றும் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், அர்ஜென்டைனா, ஸ்பெயின் உட்பட 32 நாடுகள் மோதுகின்றன. இதில் பிரேசில் ஏற்கனவே 5 முறையும் ஜெர்மனி 4 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
கத்தார் நாட்டு அணி மட்டும் போட்டியில் நேரிடையாக நுழைந்த நிலையில் மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இதுவரை உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாத இந்திய அணி இந்த முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. ஆசிய மண்டலத்திற்கான தகுதிச் சுற்றில் இரண்டாவது சுற்றில் வெளியேறியது.
![]() |
கடும் போட்டி
உலகக் கோப்பையை கைப்பற்றுவதில் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்அமெரிக்க நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும். 2002ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட தென்அமெரிக்கா வெல்லாத நிலையில் தென்அமெரிக்க ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொடக்க நாளான இன்று ‛ஏ’ பிரவில் உள்ள கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள அல்பேத் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது. தொடக்க ஆட்டம் நடைபெறும் முன்னதாக ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement