கமலாலயத்தை அணுகும் அறிவாலயம்? -அண்ணாமலையை தூக்க சபரீசன் மாஸ்டர் பிளான்!

திமுக -பாஜக கூட்டணி வரலாறு:
கொள்கைரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் துருவங்களாக பயணித்துவரும் திமுகவும், பாஜகவும் அரசியல்ரீதியாகவும் இன்று மோதி வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு, உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்துவர, இதனை கூட்டணி கட்சியான பாஜக தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, திமுகவுக்கு அடுத்து தமிழ்நாட்டில் நாங்கள்தான் என்ற எண்ணத்தை வெகுஜன மக்கள் மனதில் விதைக்க முயற்சித்து வருகிறது. பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என தங்களுக்கு பாதிப்பாக பொதுமக்கள் கருதும் பிரச்னைகளை அதிமுகவைவிட தீவிரமாக கையில் எடுப்பதில் தொடங்கி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் சினிமா பார்ப்பது வரை திமுகவையும், அதன் தலைமையையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சித்து வருகிறது பாஜக.

திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டின் மூலம் தமிழகத்தில் மெல்ல மெல்ல வளர்ந்து விடலாம் என்ற தாமரைக் கட்சியின் திட்டத்துக்கு ஓரளவு பலன் கிடைத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக பிசாசு போல வளர்ந்து வருகிறது என்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் சமீபத்தைய பகிரங்க பேச்சே இதற்கு சாட்சி.

இப்படி, பாஜகவின் திமுக எதிர்ப்பு அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், வாஜ்பாய் -கருணாநிதி ஆட்சி காலத்தில் (2001), திமுகவே பாஜக கூட்டணியில் இருந்தது என்பதும், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திமுகவும் அங்கம் வகித்தது என்பதும் வரலாறு. 20 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு தற்போது மீண்டும் உருவாகும் சூழல் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கமலாயத்தை நெருங்கும் அறிவாலயம்:
தமிழகத்தின் தேர்தல் அரசியலில் திமுகவும், காங்கிரஸும் நீ்ண்டகாலமாக கூட்டணியில் நீடித்து வருகின்றன. ஆனால் கடந்த 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியதால், திமுக -காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றாலும், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற முடியாமல் போனது.

அத்தகையதொரு நிலை 2024 இல் மீ்ண்டும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறதாம் திமுக தலைமை. எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் அனேகமாக பாஜக வெற்றிப் பெறதான் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால், இனியும் சத்தியமூர்த்தி பவனை (காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகம்) நம்பி பயலனில்லை… கமலாயம் (பாஜக மாநில தலைமை) அலுவலகம்) பக்கம வண்டியை திருப்பலாமா என்று அறிவாலயம் (திமுக தலைமை அலுவலகம்) யோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவுக்கு என்ன சிக்கல்?:
கூட்டணியின் பிரதான கட்சியான அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதும், இபிஎஸ், ஓபிஎஸ். டிடிவி, சசிகலா என்று எல்லோரும் ஒன்றாக இருந்து, தேர்தலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பதும்தான் பாஜகவின் விருப்பமாக இருந்து வருகிறதாம். ஆனால், ஓபிஎஸ் அன்கோவை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தமது நிலைப்பாட்டில் இபிஎஸ் தீர்மானமாய் இருப்பதாக தெரிகிறது.

இபிஎஸ்சின் இந்த பிடிவாதபோக்கு இப்படியே தொடர்ந்தால், அது 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவாக அமையலாம் எனவும், அத்தகையதொரு பின்னடைவு ஏற்பட்டால், வரஇருப்பது எம்பி எலக்ஷன் என்பதால் அது அதிமுகவை விட தேசிய கட்சியான பாஜகவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அக்கட்சியின் மேலிடம் கருத்தி்ல் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த கருத்தின் அடிப்படையில் ஓபிஎஸ் அன்கோவை கட்சியில் சேர்த்து கொள்வது, மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களில் அதிமுக அடமென்ட்டாக இருந்தால், கட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கைகோர்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கும் இருக்கதான் செய்கிறது.

தடையாக இருக்கும் அண்ணாமலை?:
தேர்தல் அரசியலில் கூட்டணிக் கணக்குகள் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதே நிசர்சன உண்மை என்றபோதும், தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவுடன் மட்டும் எக்காரணம் கொண்டும் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் தாமரைக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. எனவே, இவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்வரை பாஜக கூட்டணி சாத்தியமில்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளதாம் திமுக தலைமை.

ஆனால் இந்த முறை பாஜகவுடன் எப்படியும் திமுக கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறாராம் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன். தமது இந்த விருப்பம் நிறைவேற அண்ணாமலை நிச்சயம் தடையாக இருப்பார் என்பதால், அவரை பாஜக மாநில தலைமை பொறுப்பில் இருந்து மாற்ற அவர், டெல்லி பாஜக மேலிடத்தில் பேசி வருவதாகவும், தமிழக பாஜக ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளர் சூர்யா சிவா பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழுக்கு’ அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இத்தகவலை அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.