புதுடெல்லி: காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் நள்ளிரவு வாரணாசி வந்த தமிழர்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ரயில் நிலையம் சென்று வரவேற்றார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கார்த்திகை மாத முதல் நாளான நவம்பர் 17 முதல் ஒரு மாதத்திற்கு காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்திலிருந்து காசி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்ட 3 சிறப்பு பெட்டிகளில் சுமார் 650 தமிழர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு வாரணாசி வந்தனர்.
இவர்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரயில் நிலையம் சென்று வரவேற்றார். இவருடன் உ.பி. துணை முதல்வர்களில் ஒருவரான பிரஜேஷ் பாதக், பாஜக மாநிலத் தலைவர், வாரணாசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் உள்ளிட்டோர் காத்திருந்து வரவேற்றனர்.
பயணிகளில் ஒருவரான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவி வினோதா, ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் கூறுகையில், “வாரணாசியின் பாரம்பரியம், கலாச்சாரம் அறிய நாங்கள் 216 மாணவ, மாணவிகள் வந்துள்ளோம். கல்விக்கான கருத்தரங்குகள், பயிலரங்குகள், பொருட்காட்சி போன்றவையும் காண வந்தோம். நாங்கள் பாஜகவினர் அல்ல” என்றார்.
ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட இவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை வரை பயணம் செய்து அனுப்பி வைத்தார். பிறகு விமானத்தில் வாரணாசி வந்து சேர்ந்த அவரும் இவர்களை வரவேற்றார்.
வாரணாசியின் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலின் முறைப்படி தமிழர்களை சிறப்பு விருந்தினர்களாகக் கருதி உ.பி. அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் இருந்த ஒரே ஒரு முஸ்லிமான ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல் கான்(30) கூறும்போது, “கடந்த 6 வருடங்களாக நான் பாஜகவில் உள்ளேன். சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகியாக இருக்கிறேன். நான் ஒரு முஸ்லிமாக இருப்பது இந்தக் கட்சியில் எனக்கு பிரச்சினையாக இல்லை. ஆர்வத்தால் வாரணாசி கோயில்களை காண வந்துள்ளேன்” என்றார்.
இவர்களுக்காக உடுக்கைகளும், மேளதாளங்களும் ரயில் நிலையத்தில் முழங்கின. அனைவருக்கும் மாலை அணிவித்த மத்திய அமைச்சர் பிரதான், தமிழில் வணக்கம் கூறி வரவேற்றார். இவருடன் பாஜகவினரும் கூடிநின்று, தமிழ் மற்றும் பாரத அன்னையை போற்றி முழக்கமிட்டனர்.
தமிழர்கள் தரப்பில், தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!, கம்பன் பிறந்த தமிழ்நாடு, வள்ளுவன் பிறந்த தமிழ்நாடு, புரட்சி எங்கள் பொழுதுபோக்கு, போராட்டம் எங்கள் போர்க்களம், கந்தன் எங்கள் தமிழ்க் கடவுள், பாரத மாதா தாய்க் கடவுள், மரணம் எங்கள் வீரவிளையாட்டு, இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு, ஒரே மக்கள் போன்ற கோஷங்களும் எழும்பின. இதேபோல மேலும் 2 ரயில்களில் 6 சிறப்பு பெட்டிகளில் இரண்டு குழுக்கள் அடுத்தடுத்து வந்தன.