விகடன் டிஜிட்டலில் ஞாயிறுதோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது ‘காமத்துக்கு மரியாதை’ தொடர். வாசகர்கள் பலரும் செக்ஸ் சார்ந்த சந்தேகங்களை மெயில் செய்ய, மருத்துவ நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். நம்முடைய வாசகர் ஒருவர், ‘என்னுடைய பிறப்புறுப்பில் மரு இருக்கிறது. அதை எப்படி நீக்குவது’ என்று [email protected] மெயில் வழி கேட்டிருந்தார். அவருக்கு பதில் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

’’நம்மில் பலருக்கும் முகத்தில், கழுத்தில், கைகளில் மரு வந்து பார்த்திருப்போம். சிலருக்கோ, அது பிறப்புறுப்பில் வரும். ஆண், பெண் இருவருக்குமே வரும். இதற்கு காரணம், செக்ஸுவல் தொடர்புதான். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தன் வாழ்க்கைத்துணை தவிர்த்து மற்ற நபர்களுடன் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு பிறப்புறுப்பிலும் மரு வரலாம். ‘நான் அப்படி எதுவும் செய்யவில்லையே’ என்று வருத்தப்படுபவர்களுக்கு, அவர்கள் லைஃப் பார்ட்னர் மூலமாக இந்தப் பிரச்னை வந்திருக்கலாம். இதை நாங்கள் ‘ஜெனிட்டல் வார்ட்’ என்போம். இதை நீக்குவதெற்கென கெமிக்கல் க்ரீம் இருக்கிறது. அந்த க்ரீமை மிக மிக கவனமாக ஜெனிட்டல் வார்ட் மீது மட்டுமே போட வேண்டும். பக்கத்தில் உள்ள சருமத்தில் பட்டுவிட்டால் ’கெமிக்கல் பர்ன்’ ஆகி விடும். அதனால் ஏற்படும் புண் அவ்வளவு சுலபத்தில் ஆறாது. அதனால், அந்த கெமிக்கல் க்ரீமை எப்படிப் போட வேண்டுமென மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே பயன்படுத்த வேண்டும் அல்லது, சரும மருத்துவரிடம் லேசர் சிகிச்சை செய்தும் ஜெனிட்டல் வார்ட்டை நீக்கலாம்’’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.