சென்னை: தமிழக ரயில்வே காவல்துறை சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு முகாம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், சூளை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளி , டவுட்டன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவிகள் கலந்து கொண்டனர். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே காவல்நிலையம், பயணிகள் கண்காணிப்பு அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் புகார் கொடுக்கும் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்புக்குசெய்யப்பட்ட வசதிகளை மாணவிகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்த கட்டுரைமற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா, சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து, நிருபர்களிடம் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உமா கூறியதாவது: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, காவல்துறையை மாணவிகள் எவ்வாறு அணுகலாம் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பை பொருத்தவரை, பயணிகள் நேரிடையாகவோ, இணையதளம் வாயிலாகவோ, ரயில்வே உதவி எண் மூலமாகவோ கொடுக்கும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படைமுதுநிலை ஆணையர் செந்தில் குமரேசன், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் ரோகித்குமார், சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா உள்பட பலர் பங்கேற்றனர்.