அடித்து சித்ரவதை, உயிருக்கு ஆபத்து: மண்டோலி சிறையில் இருந்து மாற்றுங்கள்

புதுடெல்லி: மண்டோலி சிறையில் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் வேறு சிறைக்கு மாற்றக் கோரி மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனு மீது ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் சிக்கியவன் சுகேஷ் சந்திரசேகரன். டெல்லி திகார் சிறையில் சொகுசாக இருந்து வந்த இவன், சிறை அதிகாரிகள் தன்னிடம் அதிகளவு லஞ்சம் கேட்பாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மண்டோலி சிறைக்கு மாறினார். இதற்கிடையே, சிறையில் இருந்தபடி டெல்லி ஆம் ஆத்மி அரசு மீதும், முதல்வர் கெஜ்ரிவால் மீதும் ஏராளமான லஞ்சப் புகார்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், மண்டோலி சிறையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வேறு சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் ஆறு நகரங்களில் தனக்கு எதிராக 28 வழக்குகள் உள்ளதாகவும், அதற்காக தன்னை சந்திக்க வரும் வக்கீல்களுக்கு தினமும் 60 நிமிடங்கள் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி சிறை விதிப்படி தற்போது 30 நிமிட நேரம் மட்டுமே தரப்படுகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய மற்றும் டெல்லி அரசுகள் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.