கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே பந்திகுறி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி சமையல் அறை முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்குவதால், வகுப்பறையில் சத்துணவு சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் வி.மாதேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பந்திகுறி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 101 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சமையல் அறை மற்றும் கழிவறை கட்டிடத்தின் முன் பகுதியில் சாக்கடை கால்வாய்உள்ளது.
இக்கால்வாய் வழியாக கிராம குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. அடிக்கடி சாக்கடை கழிவுநீர் செல்வதில் தடைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நேரங்களில் பள்ளியின் சமையல் அறை மற்றும் கழிவறை முன்பு சாக்கடை கழிவுநீர் சூழ்ந்து விடுகிறது.
இதனால், சமையல் அறை மற்றும் கழிவறைகள் மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதால் வகுப்பறையில் அமர்ந்து மாணவ, மாணவிகள் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: பந்திகுறி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமையல் அறை மற்றும் சமையல் அறையின் பின்பகுதியில் உள்ள கழிவறை பகுதியில் சாக்கடை கழிவு நீர் சூழ்ந்துள்ளதால், சமையல் அறை மற்றும் கழிவறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வகுப்பறையில் சத்துணவு சமைத்து, வகுப்பறையில் மாணவர்கள் சாப்பிட்டு வருகின்றனர். சமையல் பணிகள் நடப்பதால், பாட வகுப்புகள் நடக்கும்போது, மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது. ஆசிரியர்கள் பயன்படுத்தும் சிறிய கழிவறையை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தும் நிலையுள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி சாக்கடை கால்வாயை பள்ளிக்கு வெளியே மாற்றுப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.