சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடை செய்வது, அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாக அமல்படுத்தப்படும்.
இதுதொடர்பான அவசர சட்டத்துக்கு, சமர்ப்பிக்கப்பட்ட அன்று மாலையே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். அவசர சட்டத்தில் இருந்த அதே பிரிவு மற்றும் விவரங்கள்தான் இந்த சட்ட மசோதாவிலும் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும் மசோதாவை அவர் ஏன் நிலுவையில் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து, உள்துறை மற்றும் சட்டத்துறை செயலருடன் ஆளுநரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்ததும், ஆளுநரை சந்தித்து அவரது சந்தேகத்தை தெளிவுபடுத்துவோம். மசோதாவுக்கு ஒப்புதல் பெறவும் முயற்சிப் போம்.
ஜல்லிக்கட்டு போட்டியை பொறுத்தவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அப்போதே பெறப்பட்டுள்ளது. எனவே, மேல்முறையீடு, சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறும்போது தமிழக அரசும் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து, ஜல்லிக்கட்டுக்கான சட்ட பாதுகாப்பை நிலைநாட்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில், திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசுஇல்லை என்றாலும், அரசை பிரதிவாதியாக சிலர் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் திமுகவின் கருத்தே தமிழக அரசின் கருத்தாகும். எனவே, அனைத்து கருத்துகளும் அடங்கிய சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர்விடுதலையில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இது மத்திய அரசின் முடிவு. காங்கிரஸ் கட்சி சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு வாதாடுவது குறித்து வழக்கு வரும்போது தெரிய வரும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.