மருத்துவமனையில் அனுமதி மறுப்பு தெருவில் குழந்தை பெற்ற கர்ப்பிணி| Dinamalar

திருப்பத திருப்பதியில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியுடன் உதவியாளர் யாரும் வராததால், அரசு மருத்துவமனையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அருகில் நடுத் தெருவில் அவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்துக்காக வந்தார்.

இவருடன் உதவிக்கு யாரும் வராததால், மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் பெண் மருத்துவமனைக்கு அருகில் நடுத்தெருவில் கீழே விழுந்து, பிரசவ வலியால் துடித்தார்.

அந்த வழியாக சென்ற சில பெண்கள், போர்வையால் அந்த பெண்ணை மறைத்து, அவருக்கு பிரசவம் பார்க்க முயற்சித்தனர்.

இதற்கிடையே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒருவர், அந்த வழியாக வந்தார். அவர், அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 100 படுக்கை வசதி உடைய மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு அனுமதி மறுப்பதா என, பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து திருப்பதி சுகாதாரத் துறை அதிகாரி ஸ்ரீஹரி கூறியதாவது:

நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. தற்போது அந்த பெண்ணும், அவரது குழந்தையும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளனர்.

உதவியாளர் யாரும் வரவில்லை என்றாலும், அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை, ஆணா, பெண்ணா என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.