ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

நியூடெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கு விசாரணையை காவல்துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரிப்பதற்கு சரியான காரணம் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் டெல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஷ்ரத்தாவின் நண்பர்களான, லஷ்மண், ராகுல் ராய், கோட்வின், ஷிவானி மற்றும் அவரது கணவர், ஷ்ரத்தாவும், அஃப்தாப்பும் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் ஜெயஸ்ரீ மற்றும் ஷ்ரத்தாவை கொலை செய்த அஃப்தாப்பின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டை உலுக்கியுள்ள ஷ்ரத்தா வழக்கில், டெல்லி போலீஸ் விசாரணையில் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் வீசப்பட்ட மெஹ்ராலி காடுகளில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்,காட்டில் இருந்து போலீஸார் சில எலும்புகளை கண்டெடுத்துள்ளனர். அதில் வெட்டுக் காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாபின் வாக்குமூலத்திற்குப் பிறகு, டெல்லி போலீஸ் குழு நவம்பர் 16 அன்று மூன்று முறை அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டது. மெஹ்ரோலி காட்டு பகுதியில் தான் குற்றம் சாட்டப்பட்ட அஃப்தாப் ஷ்ரத்தாவின் சடலத்தின் துண்டுகளை வீசியதாகக் கூறினார்.

கொலையின் பின்னணி

ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் 2019ம் ஆண்டு ஷ்ரத்தா மற்றும் அப்தாப் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலர்களாக  மாறியபோது, மதத்தை காரணம் காட்டி, குடும்பத்தினர் எதிர்ப்பு  தெரிவித்தனர். இதனால், இந்த ஜோடி டெல்லிக்கு வந்து திருக்மணம் செய்துக் கொள்ளாமலேயே வாழ்ந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரத்தா தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில், ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அமெரிக்க கிரைம் தொடரான ‘டெக்ஸ்டர்’யை முன் உதாரணமாக வைத்து ஷ்ரத்தாவை, அப்தாப் கழுத்தை நெரித்து கொலை  செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர், 300 லிட்டர் பிரிட்ஜ் வாங்கி அதில் 20 நாட்கள் வரை உடல் பாகங்களை பத்திரப்படுத்தி உள்ளார். 

தினமும் ஒரு துண்டை எடுத்து, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அதிகாலை 2 மணிக்கு எடுத்து கொண்டு, 20 நிமிடங்கள் நடந்து சென்று டெல்லியில் பல்வேறு பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் வீசிவிட்டு வந்துள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.