அபூர்வ ஓநாய் நோயால் அவதிப்படும் இளைஞர்| Dinamalar

போபால், முகம் மற்றும் உடலெங்கும் அதிக அளவில் ரோமம் வளரும், ‘ஓநாய் நோய்’ எனப்படும் அபூர்வ நோயால், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ௧௭ வயது இளைஞர் அவதிப்படுகிறார்.

மரபியல் கோளாறால் ‘ஹைபர்டிரிகோசிஸ்’ எனப்படும், ஓநாய் நோய் மிகவும் அபூர்வமாக ஏற்படும்.

இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் மரபணு குறைபாடுகளால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சையும் கிடையாது.

இந்த நோய் ஏற்பட்டால், உடலின் சில குறிப்பிட்ட பகுதிகள் அல்லது உடல் முழுதும், அதிக அளவில் ரோமம் வளர்ச்சி இருக்கும்.

மத்திய பிரதேச மாநிலம் நான்ட்லெடா கிராமத்தைச் சேர்ந்த, லலித் படிதார் என்ற இளைஞர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். சிறு வயதிலேயே உடல் முழுதும் அவருக்கு ரோமம் வளரத் துவங்கியது. தன்னுடைய 7 வயது வரை இதை ஒரு பெரிய பிரச்னையாக லலித் படிதார் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ரோமம் அதிகளவில் வளரத் துவங்கியதும், ஊரில் உள்ளவர்கள் தன்னைப் பார்த்து பயப்படுவது, உதாசீனப்படுத்துவது போன்றவற்றால், இது மிகப் பெரிய பிரச்னை என்பது அவருக்கு புரிய வந்தது.இந்த நோய்க்கு தற்போதைய நிலையில் எந்த சிகிச்சையும் கிடையாது. அடிக்கடி ‘ஷேவ்’ செய்வது அல்லது முடியை நீக்கும் மற்ற முறைகளை பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகும்.

இவருடைய குடும்பத்தில் யாருக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதில்லை. இந்நிலையில் தனக்கு எப்படி இந்த நோய் ஏற்பட்டது என்ற புழுக்கத்தில் லலித் படிதார் உள்ளார். இதனால், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் பங்கேற்பதில்லை; வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.