ஸ்பிக்நகர்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த சாரல் மழை காரணமாக சாலையோரங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. தென்மாவட்டங்களில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வவ்போது கனமழை பெய்து போக்கு காட்டியது.
இருப்பினும் சில நாட்கள் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக சாலையோரங்களில் காய்ந்து கிடந்த செடி, கொடிகள் துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது. குறிப்பாக அத்திமரப்பட்டி, காலாங்கரை, கோரம்பள்ளம், வீரநாயக்கன்தட்டு, குலையன்கரிசல், பொட்டல்காடு உள்பட விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள சாலையோரங்களில் புற்கள், செடிகள் முளைத்து பச்சைப்பசேலென காட்சியளிக்கின்றன. காட்டுச்செடிகளில் பல வண்ணப்பூக்களும் பூத்துக் குலுங்குகின்றன. மஞ்சள், வயலெட் என பல நிறங்களில் பூக்கள் பூத்து அவ்வழியாகச் செல்வோரின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. காலை நேரங்களில் பல்வேறு வண்ணங்களில் பூத்துள்ள பூக்களை பார்ப்பது மனதிற்கு ரம்மியத்தையும், அமைதியையும் கொடுப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.