`இதுல காற்று கூட வராது' – குழாய் அமைப்பதில் முறைகேடு? வைரலான வீடியோ; தலைவர், பி.டி.ஓ சொல்வது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள இந்திரவனம் கிராமத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில்… குடிநீருக்கான இணைப்பு ஏதும் ஏற்படுத்தப்படாமல், முறைகேடு செய்திருப்பதாக முரளிக்கிருஷ்ணன் என்னும் இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில் பேசும் முரளிக்கிருஷ்ணன், “எங்க ஊரில் 2020 – 23ம் ஆண்டுக்கான 15-வது நிதி குழுவின் கீழ், வீடு தோறும் புதிய குடிநீர் குழாய் அமைக்கிறார்கள். இந்த வருடத்திலிருந்து குழாய் இணைப்புக்கும், தண்ணீருக்கும் வரி போடுவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், தண்ணீர் குழாயை திறந்தால் தண்ணீரே வராது. இதுதான் இந்த ஆண்டிற்கான புதிய திட்டம். 

முரளிக்கிருஷ்ணன்

இதில் காற்று கூட வராது. இப்படி அமைத்தால் இந்த மக்களுக்கு எந்த வகையில் உபயோகப்பட போகிறதோ என்று தெரியவில்லை. ஜப்பானில் கூட இப்படி ஒரு திட்டம் இருக்காது. ஆனால், எங்கள் ஊர் இந்திரவனத்தில் இருக்கிறது. இதன் மதிப்பீடு 3.69 லட்சமாம். எங்களுடைய வரிப்பணம் இப்படித்தான் போகிறது” எனக் கூறும் அவர், அந்த குழாய் அமைப்பின் கீழ் தண்ணீர் இணைப்பு ஏற்படுத்தப்படாமல்… மேலோட்டமாக போலி குழாய் அமைப்பு மட்டும் வைக்கப்பட்டுள்ளதை அப்படியே எடுத்து காட்டுகிறார். மேலும், “இந்த ஒரு குழாய் மட்டும் இப்படி அல்ல, அருகிலும் இப்படி தான் உள்ளது” என கூறும் அந்த இளைஞர், மற்றொரு குழாய் அமைப்பையும் அவ்வாறே எடுத்து காட்டுகிறார். 

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியிடம் விளக்கம் கேட்டோம். “வீட்டுக்கு ஒரு குழாய் என்ற விதத்தில் தான் வைத்தோம். அதை கான்ட்ராக்டர் சும்மாதான் வைத்துவிட்டு போனார்கள். இன்னும் குழாய் இணைப்பு ஏதும் கொடுக்கவில்லை. அதற்கான பள்ளம் கூட எடுக்கவில்லை. மறுநாள் காலையில் பள்ளம் எடுத்து குழாய் இணைப்பு கொடுப்பதாக தான் இருந்தது. அங்கு கான்ட்ராக்டர் யாரோ தான் அப்படி வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த தம்பி அன்றுதான் ஊருக்கு வந்திருக்கிறார், தெரியாமல் வீடியோ எடுத்து போட்டுவிட்டார். இது பற்றி அந்த தம்பி எங்களிடம் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் விளக்கி கூறியிருப்போம். 

திருவண்ணாமலை

எங்கள் ஊரில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. இப்போது 152 குழாய் இணைப்புக்கு தான் அனுமதி வந்துள்ளது. அதை தான், உரிய முறையில் பிரித்து குழாய் இணைப்பு ஏற்படுத்தி வருகிறோம். வட்டார வளர்ச்சி அலுவலர், இஞ்ஜினியர் எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போய்விட்டார்கள். இப்போது வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

குழாய் நீர்

இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி-யிடம் பேசினோம். “அப்படி முறைகேடு ஏதும் நடக்கவில்லை. இப்போதுதான் பணியை தொடங்கி பைப் லைன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுருக்கமாக சொன்னவரிடம், தண்ணீர் வசதியுடன் குழாய் இணைப்பு ஏற்படுத்தப்படாமலே, அப்படி ஒரு குழாய் அமைப்பு மட்டும் போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதே ஏன்? என கேள்வி எழுப்பினோம். “தற்காலிகமாக அப்படி வைத்துவிட்டு. அதை பைப் லைன் போடுவதற்காக வைத்துள்ளனர். இப்போதுதான் பைப்லைன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி முடித்துக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.