“என்னை கொன்னுருவேன்னு சொன்னான்; அதான், அவனைக் கொன்னுட்டேன்!" – சொத்து தகராறில் அண்ணனைக் கொன்ற தம்பி

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி யாரப் நகர் மசூதி தெருவைச் சேர்ந்தவர் முரளி (37). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த, 20-ம் தேதி இரவு இரண்டு மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீஸார் விசாரித்து வந்தனர்.

முரளிக்கும் அவர் தம்பி தேவராஜூக்கும் (35), சொத்து தொடர்பான தகராறு இருந்ததும், இதனால், தேவராஜ் தன் நண்பரான சின்ன மேனகரம் பகுதியைச் சேர்ந்த அசோக் (35 ) உடன் இணைந்து, அவர் அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த தேவராஜ், அசோக்கை தேடி வந்த போலீஸார், இன்று (23-ம் தேதி) கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் ஒசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கைதான தேவராஜ், அசோக்

கைதான தேவராஜ் போலீஸாரிடம், ‘‘அப்பா அம்மா, அண்ணன், எனுக்கும் சேர்த்து, 40 சென்ட்க்கு நிலம் இருந்துச்சு; நாலு பேருக்கும் பாகமும் பிரிச்சாச்சு. என் அண்ணன் நெறைய பொண்ணுங்ககூட பழகிட்டு, குடிச்சுட்டு வந்து, அப்பா, அம்மாகிட்ட அவங்க சொத்தையும் கேட்டு தகராறு செய்துட்டே இருந்தான். என்கிட்டயும் சொத்த கேட்டவன், என்னைய கொல்லுவேனு சொன்னான்; அதான், ஆத்திரத்துல கொன்னுட்டேன்” என விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.