சென்னை: தனக்கு வழங்கப்பட்டுள்ள திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை, மிகப் பெரிய பொறுப்பாக பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி நாவலர் நெடுஞ்செழியன் நகரில் புதிய குடியிருப்புகளுக்கான பணிகள் நடைபெறுவதையொட்டி, மக்கள் வெளியில் தங்குவதற்கான கருணைத் தொகையை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “40 -50 ஆண்டுகள் பழமையானது இந்தக் கட்டடம். இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். கிட்டத்தட்ட 396 வீடுகள், அதில் 294 பயனாளிகளுக்கு கருணைத் தொகை வழங்கியிருக்கிறோம். அனைவருக்கும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி திராவிட மாடல் ஆட்சி, மக்களுக்கான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்கு என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். அவரது வழியில் நான் உட்பட அத்தனை பேரும் உங்களுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.
பின்னர் அவரிடம் திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவர், “இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மிகப் பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்” என்று கூறினார்.
முன்னதாக, திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பட்டியல் வெளியிட்டிருந்தார். மேலும், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் ஆலோசனைக் குழு பொறுப்பாளர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.