மங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் நிகழ்ந்த ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை விரைவில் என்.ஐ.ஏ வசம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் (37) காயமடைந்தார். குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷரீக் (24) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷரீக், போலி ஆதார் அட்டை மூலம் சிம்கார்டு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிமோகாவில் குண்டுவெடித்து அவர் ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மங்களூரு போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘ஷரீக் திட்டமிட்டு தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டுள்ளார். தனது வாட்ஸ்அப் முகப்பு படமாக (டிபி) ஆதியோகி சிவன் படத்தை வைத்துள்ளார். தனது பெயரை பிரேம்ராஜ், அருண்குமார் என கூறி விடுதிகளில் தங்கியுள்ளார். தமிழகத்தில் கோவை, ஊட்டி மற்றும் கேரளாவுக்கும் சென்று வந்துள்ளார்’’ என்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காவல்துறை தலைவர் பிரவீன் சூத், இந்த வழக்கை என்.ஐ.ஏ மற்றும் பிற மத்திய விசாரணை அமைப்புகள் இணைந்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதால் அமலாக்கத் துறையும் தொடக்கம் முதலே இந்த வழக்கை விசாரித்து வருகிறது. உரிய நேரத்தில் இந்த வழக்கு அவர்கள் வசம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.
இந்த பயங்கரவாத சம்பவத்தால் பொதுமக்களுக்கோ பொது சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தவும், நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தவுமே இது மிகப் பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய திட்டம் இருந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள காவல் துறை தலைவர்களுடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர் யார் யார் என்பதைக் கண்டறியும் பொது நோக்கோடு நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் தெரிவித்துள்ளார்.