விஜய் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். வம்சி பைடிபள்ளி இயக்க, தில்ராஜு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வாரிசு படத்துக்கு ஆந்திராவில் சிக்கல் எழுந்திருக்கிறது. பண்டிகை நாள்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுமென்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதனால் பொங்கலுக்கு படம் ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதேசமயம் பொங்கலுக்கு எப்படியாவது படத்தை வெளியிட வேண்டுமென்பதில் விஜய் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல்களும் எழுந்திருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க வாரிசு படத்துக்கு வந்திருக்கும் சிக்கல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை பனையூரில் வைத்து சந்தித்தார் விஜய். அப்போது புஸ்ஸி ஆனந்த் காலில் ரசிகர்கள் விழும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆனந்த்தை அழைத்து விஜய் எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும், உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள் அதுதான் முக்கியம் என விஜய் அறிவுறுத்தியதாகவும் அவரது ரசிகர்கள் கூறினர்.
நிலைமை இப்படி இருக்க விஜய்க்கு அபராதம் விதித்த்திருக்கிறது போக்குவரத்து காவல் துறை. பனையூரில் நிர்வாகிகளை சந்திக்க விஜய் காரில் வந்தார். அந்தக் காரில் கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒருவர், “நடிகர் விஜய் நீதிமன்ற உத்தரவை மீறி கண்ணாடியில் கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார். விஐபிக்கள் மட்டும் காரில் கறுப்பு ஸ்டிக்கரை ஒட்டலாமா? என போக்குவரத்து காவல் துறையின் சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து கறுப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் விஜய் வந்ததால் அவருக்கு 1000 ரூபாய் அபராதத்தை தற்போது போக்குவரத்து காவல் துறை விதித்துள்ளது. இதுதொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.