#ChennaiSnow ட்ரெண்டிங் – சென்னையில் பனிபொழிவா? – உண்மையை விளக்கும் வானிலை ஆய்வு மைய தலைவர்!

வழக்கமாகச் சென்னையில் மழை, வெயில் என்றுதான் நாம் அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக சென்னையில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவும் குளிரும் இருந்து வருகிறது.

ட்விட்டர்

வலைதளங்களில் சென்னை ஊட்டி போல மாறிவிட்டதே! என்ற மீம்ஸ்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் நேற்று முன்தினம் ட்விட்டரில் #ChennaiSnow என்ற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வந்தது.

இதையடுத்து சென்னையின் பனிப்பொழிவு பற்றி இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “முந்தைய ஆண்டுகளைவிட இந்த வருடம் குளிர் அதிகமாக இருக்கிறது என்பது மிகவும் தவறான விஷயம். மழைக்காலத்தில் மழை அதிகமாக பெய்யும்போது, இயல்பைவிட வெப்பநிலை குறைவாகத்தான் பதியும். இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. தற்போது காற்று அடித்து வருவதால் நமக்கு குளிர் அதிகமாக தெரிகிறது.

பாலச்சந்திரன்

#ChennaiSnow என்பதில் சென்னையில் Snow என்பது மிகவும் தவறான வார்த்தை. சென்னையில் பனிப்பொழிவு என்பது காலையில் வரக்கூடிய மூடுபனி(Mist) போன்றதாகும். பொதுவாக Snow ஹிமாச்சல் பிரதேசம், காஷ்மீர் போன்ற பகுதிகளில்தான் இருக்கும்.

தற்போது சென்னையில் இருந்து வரும் மூடுபனிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முதலாவதாக அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கிறது. மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வெப்பநிலையை கணக்கிட்டால் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு டிகிரியிலிருந்து 5 டிகிரி வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு டிகிரியில் இருந்து 2 டிகிரி முதல் 3 டிகிரி வரையும் குறைந்துள்ளது. இதில் அதிகபட்ச வெப்பநிலை சூரியஒளி இல்லாததால் அதிகமாக குறைந்துள்ளது.

பனிப்பொழிவு!

அடுத்ததாக, சமீபத்தில் பெய்துள்ள மழையால், நிலத்தில் ஈரப்பதமும், மேகமற்ற நிலையும் இருந்து வருகிறது. வானில் மேகங்கள் இல்லாததால், நிலத்திலிருந்து வானுக்கு செல்லும் கதிர்வீச்சு (outgoing radiation) திரும்ப நிலத்திற்கு வராமல் வெப்பநிலையை குளுமை ஆக்கியிருக்கிறது. மேலும், 19 மற்றும் 20-ம் தேதியில் வடக்கு திசையிலிருந்து காற்று அவ்வப்போது 35-40 கி.மீ வேகத்தில் வீசியுள்ளது.

தற்போது டெல்லி போன்ற வடஇந்திய மாநிலங்களில் குளிர்காலம் ஆகும். அதனால், வடக்கிலிருந்து குளிர்காற்றை கொண்டுவந்துள்ளது. தவிர, சூரியஒளி அதிகமாக இல்லாததால், நமக்கு உள்வரும் சூரிய கதிர்வீச்சும் அதிகமாக இல்லை. இதனால் நமக்கு வெப்பம் இல்லை. இவையெல்லாம் கலந்துதான் சென்னையின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையை குறைத்திருக்கிறது.

சென்னை மழை

பொதுவாக வெப்பநிலையை உணர்வு (feel temperature) என்ற ஒன்று உள்ளது. வெப்பநிலை மாறாமல் இருந்தாலும் காற்று அடிக்கும்போது நமக்கு குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால்தான் குளிர்ச்சியாக தெரிகிறது. நமக்கு பனிப்பொழிவு என்பது ஜனவரி,பிப்ரவரி காலக்கட்டத்தில்தான் இருக்கும். இந்த சீசனில் நமக்கு பனிப்பொழிவு கிடையாது.

வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை. தற்போதைய நிலையில் வடதமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை இருக்கும். தென்தமிழகத்தில் அவ்வளவாக மழை இருக்காது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.