'கட்சியின் நற்பெயருக்கு களங்கம்'.. சூர்யா சிவா 6 மாத காலம் சஸ்பெண்ட் – அண்ணாமலை அறிக்கை

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, சூரியா சிவாவை பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா இருவரும் செல்போனில் பேசிக்கொண்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பா.ஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
image
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பா.ஜ க அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. பா.ஜ க மாநில துணைத்தலைவர் கனக சபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சிவா ஆகியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இருவரும் சுமூகமாக பேசி முடித்துக்கொண்டதாக தெரிவித்தனர்.
image
இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
image
அந்த அறிக்கையில், பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும், சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும், அதை மாநில தலைவராக தான் ஏற்க மறுப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம் எனவும், அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர்மேல் தனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும் என்றும் அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சூர்யா சிவா, டெய்சி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இருந்தனர். அந்த சந்திப்பின் போது டெய்சி பேசுகையில், “பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்துள்ளோம். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு அவல் கிடைத்ததுபோல இந்த ஆடியோவை பரப்பி வருகின்றனர். எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். கண்பட்டு விட்டதுபோல நடந்துவிட்டது. தம்பி போலத்தான் சூர்யா சிவா, இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
image
அவரைத்தொடர்ந்து சூர்யா சிவா பேசியபோது, “சுமூகமாக முடித்துக்கொண்டோம். இருவரும் ஆடியோவை வெளியிடவில்லை. எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளேன். தவறு எனும்பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். குடும்பரீதியிலான நட்புறவுடன்தான் இருக்கிறோம். சின்ன அசம்பாவிதம்தான்; ஆனால் இனி இதுபோல நடக்காது. மாநில தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதை பரப்பி வருகின்றனர்.
திமுகவின் சைதை சாதீக் போன்றவர்கள் பேசியதற்கு கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆனால் பாஜகவில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவோம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.