கரூர்: வலிப்பு ஏற்பட்டு மயங்கிய மாணவன் மரணம் – பள்ளி நிர்வாகம் மீது புகார்!

கரூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் நேற்றிரவு திடீரென உயிரிழந்தார். வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக பள்ளி நிர்வாகம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, ஏற்கனவே மாணவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் பள்ளி நிர்வாகி, விடுதி காப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோரி காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள தம்மணபட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சரவணனின் மகன் சந்தோஷ் (வயது 15) விடுதியில் தங்கி 11 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியின் விடுதியில் உணவு அருந்த சென்ற போது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தினர் அவரை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதித்த மருத்துவர் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
image
இதையடுத்து சந்தோஷ் குமாரின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
image
இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் தந்தை அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகம், விடுதி காப்பாளர், பள்ளி தாளாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி, எனது மகன் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
image
புகாரை பெற்றுகொண்ட அரவக்குறிச்சி காவல் நிலையப் போலீசார், மாணவர் உயிரிழந்தது குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.