கோகுல்ராஜ் வழக்கில் திருப்பம் : பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி… பரபரப்பு வாக்குமூலம்

நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து  தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிறழ்சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடன் ஒரே கல்லூரி வகுப்பில் பயின்ற சுவாதியை  காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனடிப்படையில் தற்போது நீதிபதிகள் முன்பாக சுவாதி இன்று ஆஜராகியுள்ளார்.

சுவாதி வாக்குமூலம்

“கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் பயின்றார். நானும் அவரும் ஒரே வகுப்பு. சக மாணவரைப் போல கோகுல்ராஜைத் தெரியும். அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியுள்ளேன்” என சுவாதி கூறியுள்ளார். அவர் வசதி குறைந்த வகுப்பைச் சேர்ந்தவர் என தெரியுமா என நீதிபதிகள் கேட்டத்தற்கு, தெரியாது என சுவாதி பதிலளித்துள்ளார். 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, கல்லூர் முடிநந்து பின்னர், அன்று என்ன நடந்தது என்பதை கூறுங்கள் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். நடந்தவற்றை மட்டும் கூறுங்கள் என்று நீதிபதிகள் கேட்டுள்ளனர். 

மேலும், 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் நினைவிருக்க வாய்ப்பில்லை. அதனால், தேவையானவற்றை நாங்கள் நியாபகப்படுத்துகிறோம்  எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு, அன்று காலை தான் யாரையும் பார்க்கவில்லை என சுவாதி கூறியுள்ளார்.  

நீங்களாக உண்மையைச் சொல்லவில்லை என்றால் அது தொடர்பான வீடியோவை போட்டுக்காண்பித்து, பொய் சொல்லியதாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு அதிகாரம் உள்ளது. குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த வீடியோவில் இருப்பது நானல்ல என சுவாதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.