அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது தொடர்பான சட்டத்தை உடனடியாகத் தயாரிக்கவும்
- பிரதமரும், பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் அதிகாரிகளுக்குப் பணிப்புரை…
- அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்த விசாரணைகள் காலதாமதம் அடைவதைத் தடுக்கத் துரித நடவடிக்கை
- மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தமது பணிகளை முன்னெடுக்க அலுவலக வசதி
- பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பில் தேசிய கொள்கையைத் தயாரிக்க ஆலோசனை
- கொழும்பு நகரின் சுகாதார மற்றும் கழிவுநீர் திட்டம் குறித்து தீவிர கவனம்
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் அதன் சட்ட அதிகாரிகளுக்கு, பிரதமரும், பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்தார்.
பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிரதமர் தலைமையில் (24) நடைபெற்ற போதே இந்தப் பணிப்புரையை வழங்கினார்.
கள அதிகாரிகள் தமது தொகுதிகளில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஒக்டோபர் 19ஆம் திகதி சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தின் செயலாற்றுகை குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நிறுவனத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களை நிறுவனத்துக்கு அழைத்து விளக்கமளிக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கினார்.
பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் தொடர்பில் குறிப்பிட்ட முறைமை எதுவும் இல்லை எனவும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போது பிரதேச செயலாளர் ஒருவர் 06 வருடங்களே ஓரிடத்தில் பணியாற்ற முடியும் என்றும், அதிகபட்சமாக 12 வருடங்களும் சேவையாற்ற முடியும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது தொடர்பில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சிபாரிசைப் பெற்று பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலகங்கள் சிலவற்றில் 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கினார். இலஞ்சம், மோசடி மற்றும் ஊழல்களில் ஈடுபடும் பிரதேச செயலாளர்கள் குறித்த விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
முறைகேடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததுடன், ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இருந்தபோதும் தமக்குக் கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர் மட்டத்திலான முறைப்பாடுகள் பிரதேச செயலாளர்களுக்கும், இரண்டாம் மட்டத்திலான முறைப்பாடுகள் மாவட்ட செயலாளர்கள் மட்டத்திலும், மூன்றாம் மட்டத்திலான முறைப்பாடுகளில் பொதுநிர்வாக அமைச்சு நேரடியாகத் தலையிடுகிறது. அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் ஏற்படும் அதீத காலதாமதத்தை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுனார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான அலுவலக வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும், வசதிகள் இல்லாத பட்சத்தில் ஆளுநர்களுடன் கலந்துரையாடி அதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் பிரதமர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட இதுவரை அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ளாத நகரசபையை மாநகர சபையாக உயர்த்துவது தொடர்பான விடயத்தை மீண்டும் அமைச்சரவையில் முன்வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மேலதிக செயலாளருக்குப் பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
உள்ளூராட்சி தேர்தல் முறையை மாற்றியமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததுடன், அந்த கோரிக்கைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டில் தேர்தல் முறைமையை மாற்றியமைக்க பிரதமர் எடுத்து வரும் நீண்ட கால முயற்சிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நன்றி தெரிவித்தார்.
கடந்த 15 வருடங்களாக கொழும்பு மாநகரில் துப்புரவு மற்றும் கழிவுநீர் உட்கட்டமைப்புக்கு அதிகளவு பணம் செலவிடப்பட்ட போதிலும், இதுவரையில் அந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்படவில்லை என கவலை தெரிவித்த பிரதமர், அதற்கான தனியான முன்மொழிவுகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பான முன்னெடுப்புக்களை அடுத்த ஆண்டுக்குள் முடித்து அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கும், அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இச்சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜானக வக்கும்புர மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த மற்றும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டனர்.