”மயங்கி விழுந்த மாணவி” தொடரும் அசம்பாவிதங்கள்! கேள்விக்குறியாகிறதா மாணவர்களின் ஆரோக்கியம்?

குளித்தலை அருகே லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மயக்கம் ஏற்பட்டு முதல் மாடியில் இருந்து விழுந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக மாணவர்கள் மயக்கம் ஏற்பட்டும், வலிப்பு ஏற்பட்டும், மாரடைப்பால் உயிரிழக்கும் அசம்பாவிதங்கள் அதிகரித்து கொண்டே இருப்பது அதிர்ச்சியையும், மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியையும் ஏற்படுத்தி வருகிறது.
image
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளபள்ளி ஊராட்சி பகுதிகளான லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளி கல்வித்துறை சார்பாக கலைத்திருவிழா நடைபெற்றது. இப்பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் லாலாபேட்டையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியின் முதல் மாடியில் இருந்து நிலை தடுமாறி விழுந்துள்ளார். பின்னர் விழுந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
image
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இருந்த மாணவியிடம் லாலாபேட்டை காவல்துறையினர் விசாரணை செய்ததில், அடிக்கடி மயக்கம் வருவதாகவும், இன்று மயக்கம் வந்த நிலையில் நிலைத்தடுமாறி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
முதல் மாடியிலிருந்து விழுந்ததில் மாணவிக்கு இடுப்பு பகுதியில் பலத்த அடிபட்டு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
image
மாணவர்களின் உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான நடவடிக்கையில் பெற்றோர்களும், அரசும் துரிதமாக ஈடுபட்டு தொடர்ந்து ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.