முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சரியாக விளையாடுவதில்லை, சதம் அடிக்கவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆசியக் கோப்பையில் சதம், தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என மீண்டும் பார்முக்கு வந்து பல சாதனைகளைப் படைத்திருந்தார் விராட் கோலி.
குறிப்பாக T20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது விராட் கோலியின் பேட்டிங் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது. களத்தில் விளையாடிய கோலி 82 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறவும் செய்திருந்தார்.
October 23rd 2022 will always be special in my heart. Never felt energy like that in a cricket game before. What a blessed evening that was pic.twitter.com/rsil91Af7a
— Virat Kohli (@imVkohli) November 26, 2022
மேலும், இந்த T20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பல விஷயங்கள் அனைவரையும் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது இது தொடர்பாக விராட் கோலி ட்விட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், மைதானத்திலிருந்து விராட் கோலி நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “அக்டோபர் 23, 2022 எப்போதும் என் இதயத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாக இருக்கும். இதற்கு முன் கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒரு எனர்ஜியை நான் உணர்ந்ததே இல்லை. என்ன ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மாலை வேளை அது..!” என்று அந்தப் போட்டியை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், விராட் கோலியின் இந்தப் பதிவு அவரது ஓய்வைச் சூசகமாக அறிவிக்கும் வகையில் உள்ளது என்றும், எம்.எஸ்.தோனியும் ஓய்வுபெறும் போது இதுபோன்ற பதிவைத்தான் பதிவிட்டார் என்றும் இணையத்தில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால், டிசம்பர் 4-ம் தேதி தொடங்கும் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு விராட் கோலி தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் ஃபிட்னஸ், பார்ம் உள்ளிட்டவற்றைக் கணக்கிடும்போது அவர் இன்னமும் சில ஆண்டுகள் கிரிக்கெட் ஆடுவார் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.