இந்தித் திணிப்பு எதிர்ப்பு – “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது! சேலம் தங்கவேலு மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

சென்னை: இந்தித் திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தை சேர்ந்த, 85வயது திமுக பிரமுகர் தீக்குளித்த நிலையில்,  “இனி ஒரு உயிரையும் இழக்கக் கூடாது என்றும், இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி தாழையூர் முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் என 85வயது முதியவர்  தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கவேல் மறைவுக்கு,  முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது, இரங்கல் பதிவில், ”இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக – ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். ‘இந்தியைத் திணிக்காதே’ எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.