கோட்டயம்,கேரளாவில் கள்ள நோட்டு அச்சடித்து, அவற்றை செலவிட்டு வந்த தாய் – மகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கோட்டயம் மாவட்டம், அம்பலப்புழா பகுதியில் வசித்து வருபவர்கள் விலாசினி, ௬௮, மற்றும் இவரது மகள் ஷீபா, ௩௪. விலாசினி, அருகில் உள்ள லாட்டரி சீட்டு கடைக்குச் சென்று அதை வாங்குவது வழக்கம்.
இந்நிலையில், அக்கடையின் உரிமையாளருக்கு, விலாசினி கொடுக்கும் பணத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துஉள்ளார்.
இதையடுத்து, போலீசார் விலாசினியை வரவழைத்து சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் இருந்து ௧௦௦ ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதில், இவரது மகள் ஷீபாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் பின், இவர்களது வீட்டுக்குச் சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தி ௫௦௦ ரூபாய் நோட்டுகள் ௩௧ மற்றும் ௨௦௦ ரூபாய் நோட்டுகள் ஏழு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
‘ஷீபா இணையதளம் வாயிலாக, கள்ள நோட்டு தயாரிப்பதை அறிந்து, வீட்டிலேயே அச்சடிக்க ஆரம்பித்தார். இந்த கள்ள நோட்டுகளை தன் தாயிடம் தந்து, பலசரக்கு கடை உள்ளிட்ட சிறு சிறு கடைகளுக்கு அனுப்பி பொருட்களை வாங்கி வந்துள்ளார்’ என போலீசார் தெரிவித்தனர்.
கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தி வந்த ‘லேப் டாப், பிரின்டர், ஸ்கேனர்’ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, தாய், மகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்