கொச்சி, மாமனாரிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த மருமகன் குறித்து, கொச்சி குற்றப்பிரிவு போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆலுவா நகரைச் சேர்ந்தவர் அப்துல் லாஹிர் ஹாசன். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் தொழில் செய்து வருகிறார்.
இவர் தன் மகளை, 2017ல் காசர்கோடைச் சேர்ந்த முஹமது ஹாசிப் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அப்போதுமகளுக்கு 1,000 சவரன் நகைகள் பரிசளித்தார்.
திருமணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்டமாக நடத்தினார்.
இந்நிலையில், மருமகன் மாமனாரிடமிருந்து பணம் கறக்க ஆரம்பித்தார்.
அமலாக்கத் துறை தன் மீது விதித்த அபராதத்தை செலுத்த 4 கோடி ரூபாய், சொந்தமாக தொழில் துவங்க 92 கோடி ரூபாய் என இதுவரையிலும் மாமனாரிடம் இருந்து 107 கோடி ரூபாய் வாங்கி விட்டு திருப்பித் தரவில்லை.
அவருடைய 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரையும் ஹாசிப் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதவிர, மாமனாரின் சில சொத்துக்களையும் சட்டவிரோதமாக தன் பெயருக்கு மாற்றிக்கொண்டார் என தெரிகிறது.
இதையடுத்து, தன் மருமகன் 107 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, அப்துல், ஆலுவா போலீசில் புகார் செய்திருந்தார்.
ஆனால், தன் மருமகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கோவாவில் இருப்பது தெரிந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்துல் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, அப்துல் கொடுத்துள்ள மோசடி புகார் குறித்து விசாரிக்க, கொச்சி குற்றப்பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement