எய்ம்ஸ் அறிக்கையை ஏன் நிராகரித்தேன்: ஆறுமுகசாமி ஓப்பன் டாக்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அண்மையில் தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சம்ர்பித்தது. அந்தஅறிக்கை சட்டமன்றத்திலும் சமர்ப்பிக்கபப்ட்டு விவாதிக்கப்பட்டது.

அதில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் மீண்டும் இணைந்த பிறகு அவர்களுக்கு இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்று கூறும் ஆறுமுகசாமி அறிக்கை, பிரிட்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், மருத்துவர் சமின் ஷர்மா ஆகியோர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் அவரது கடைசி மூச்சு வரை அந்த சிகிச்சை ஏன் நடக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னதாக, ஆணையத்துக்கு உதவ உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜெயலலிதா சிகிச்சையில் தவறு இல்லை என்று ஆணையத்திடம் அறிக்கை சம்ர்பித்திருந்தது. ஆனால், அந்த அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் ஏற்கவில்லை. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனமும் தனது வருத்தததை தெரிவித்திருந்தார். எய்ம்ஸ் அறிக்கை ஏற்கப்படாதது ஆச்சரியமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், எய்ம்ஸ் அறிக்கையை நிராகரித்ததற்கான காரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதலில் இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சை வேண்டாம் என மூன்று மருத்துவர்கள் கூறியதாக அறிக்கை வெளியானது. ஆனால், மருத்துவர்கள் ஏன் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவில்லை என்பது என்னுடைய சந்தேகமாக இருந்தது. சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறியதும் முரணாக இருந்தது. அதனால், ஏய்ம்ஸ் அறிக்கை நிராகரிக்கப்பட்டது.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் குறித்து ஏராளமான சர்ச்சைகள் கிளம்பின. அந்த சமயத்தில் தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஸ், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தினார். இதையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைப்புக்கு பிறகு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை 2017ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு அமைத்தது.

இதையடுத்து, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், உறவினர்கள், ஓபிஎஸ், சசிகலா, அவரின் உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் அண்மையில் சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.