ஷாங்காய்: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் உள்ள உயரமான ஒரு கட்டிடத்தில் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கட்டிடம் பகுதியளவு பூட்டப்பட்டதால் உள்ளே இருந்தவர்கள் சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அதீத கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் ஷாங்காய், உரும்கி உள்பட சீனாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை இட்டனர்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் இந்த போராட்டம் சீன கம்யூனிச கட்சிக்கு எதிராகவும் இருந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக, அதிபர் ஜி ஜின்பிங் ஒழிக என்றும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. எனினும், கம்யூனிச கட்சிக்கு எதிராக கோஷங்கள் இடுவது அந்நாட்டில் மிகவும் அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று உருவான இடமான சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், கொரோனா தொற்றை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான கொள்கையை அந்நாட்டு அரசு அறிவித்து, அதற்கேற்ப கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீடுகளை விட்டு வெளியே செல்வதில் கட்டுப்பாடு, பணி இடங்களில் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் சீன மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் வேண்டாம்; சுதந்திரம்தான் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 2.5 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காயில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. உரும்கி நகரில் 40 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர 100 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று உலக அளவில் குறைந்து வந்தாலும் சீனாவில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.