கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஏரிக்கரை பகுதியில் உள்ள முட்புதரில் மனித எலும்புக்கூடு ஒன்று இரண்டு துண்டுகளாக கிடந்தது. இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்ததாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீசார் கைப்பற்றிய எலும்புக்கூட்டுடன் கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கால் சட்டை அப்படியே இருந்தது. அதன் அருகே ஒரு ஜோடி ஷூவும் கிடந்தது. அந்த நபர் அணிந்திருந்த டி-ஷர்டில் “சேலஞ்ச் 87 கிரியேட்டிவ் டன் இன்பெட்டர்” என எழுதப்பட்டிருந்தது. கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே முப்புதரில் இறந்து கிடந்தது யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முப்புதரில் கண்டெடுக்கப்பட்டவர் இறந்து பல நாட்கள் ஆகும் என்பதால் மர்ம நபர்கள் அவரை கடத்தி வந்து கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரால் கைப்பற்றப்பட்ட எலும்பு கூடு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசார் கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மாயமானவர்கள் பற்றிய விவரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.