தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கு கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 படகுகளில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளதாக அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.