விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேவுள்ள கோண்டூர் சாலையில் சேகர் என்பவர் இரண்டு சிறு வணிக வளாகங்களை 6 மாதங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் கட்டியிருக்கிறார். அதில் ஒரு கடை கடந்த 3 மாதங்களாக மளிகைக்கடையாக செயல்பட்டு வருகிறது. அருகிலிருந்த மற்றொரு கடையை மெக்கானிக் ஒருவர் வாடகைக்கு கேட்டதாகக் கூறப்படுகிறது. வாகனங்களை வாட்டர் வாஷ் செய்வதற்கான தண்ணீரை சேமிப்பதற்கு கடையின் அருகில் மூடிவைக்கப்பட்டிருந்த தொட்டியை சரிசெய்ய வேண்டியிருந்ததாம். எனவே, கட்டட உரிமையாளர் சேகர், தரைத்தள தொட்டியில் பிரிக்காமலிருந்த பலகைகளை எடுத்துவிட்டு பூச்சு வேலை செய்ய வேண்டும் என மேஸ்திரி மணிகண்டன் என்பவரிடம் கூறியிருக்கிறார்.

எனவே, பாக்கம் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி மணிகண்டன்… இந்தப் பணியை செய்வதற்காக ஐய்யப்பன், அறிவழகன் ஆகிய இருவரை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த ஆறு மாத காலமாக மூடிவைக்கப்பட்டிருந்த தொட்டியின் மூடியை திறந்துவிட்டு, ஏணியை கொண்டு அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் உள்ளே இறங்கியபோது மூச்சடைத்து மயங்கி விழுந்திருக்கின்றனர். இதனைக் கண்டு அதிர்ந்த அறிவழகன், அவர்களை மீட்க உள்ளே இறங்க முற்பட்டபோது, மூச்சடைப்பதாக கூறி மயங்கியிருக்கிறார். அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
உள்ளே விழுந்த இருவரை மீட்க அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து முயற்சி செய்திருக்கின்றனர். மேலும், இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கண்டமங்கலம் காவல்துறை அதிகாரிகள் ஐய்யப்பன், மணிகண்டன் உடல்களை மீட்டு பார்த்தபோது, இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

பின், இருவரின் உடல்களையும் உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மூடிவைக்கப்பட்டிருந்த தரைத்தள தொட்டியில், பூச்சுவேலை செய்வதற்கு இறங்கியதாகக் கூறப்படும் இருவர் உயிரிழந்த அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.